தமிழகத்து மேடைகளில் ஓங்கி ஒலிக்கும் அறிவார்ந்த குரலுக்குச் சொந்தக்காரர்; ஆங்கிலப் பேராசியராகப் பணியாற்றியவர் என்றபோதிலும், நல்ல தமிழில் ஆற்றொழுக்கான நடையில் பேசுவதில் வல்லவர். பேசுபவர்களை நெளிய வைக்கும் விரசமான நகைச்சுவை துளியுமின்றி பேசும் தமிழின் முதல்தர பேச்சாளர்களுள் ஒருவர். நகைச்சுவை அருவி.
தனது கம்பீரமான - சிந்தனை தெளிவுமிக்க உரையாற்றுதலுக்காக பல உலக நாடுகளை வலம் வந்தவர். சிந்தனை அரங்கு, அறிவியல் களம், ஆன்மீக மேடை, கருத்தியல் விவாதம் என எல்லாப் பேச்சுகளிலும் நகைச் சுவையான வாழ்வியல் சம்பவங்களைச் சொல்லி, பார்வையாளர்களைத் தனித்துவத்துடன் தன்பக்கமாக ஈர்ப்பவர். மதுரையில் பிறந்து, தற்போது தென்காசியில் வசித்தாலும் சிவகாசி ராமச்சந்திரன் என்றறியப்படுபவர். முதல் மேடையேறி, ஐம்பதாவது ஆண்டினை நிறைவுசெய்திருக்கும் அவருக்கு பொன்விழா ஆண்டிற்கான வாழ்த்துகளைச் சொல்லி, "இனிய உதயம்' இதழுக்காக நடத்திய இனியதோர் உரையாடல் இங்கே; முதலில் தங்களின் பள்ளிக்காலத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்..! நான் மதுரைக்காரன். மதுரையில் பிறந்து, வளர்ந்து, படித்ததில் எனக்குப் பெருமையும் பெருமிதமும் உண்டு.
வீட்டுக்கு அருகில் ஆரம்பப்பள்ளி; பழைய குயவர் பாளையம் ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை படித்தேன். சின்ன வயதுப் பிள்ளைகளுக்கு இன்றைக்கு இருக்கிற அழுத்தமெல்லாம் அன்றைக்குக் கிடையாது. ஒரு சிலேட்டும், குச்சியும் போதுமானதாக இருந்தது. ஐந்து வயது முதல் பத்து வயது வரை, பள்ளிக்குப் போவதும் வருவதுமான படிப்பாக இருந்தது.
ஆறாவது வகுப்புக்கு வீட்டிலிருந்து கொஞ்ச தூரத்தில் சௌராட்டிர உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றேன்.
அது கம்பீரமான கல் கட்டடம். என்னைக் கற்கச் சொன்ன கட்டடம். எஸ்.கே.குப்புசாமி சார் தான் தலைமையாசிரியர். முத்துக்குமாரசாமி ஐயா போன்ற தமிழாசிரியர்களை மறக்கமுடியாது. ஆறாவது வகுப்பில்தான் ஆங்கிலம் அறிமுகமானது. இந்தி, இசை, கைத் தொழில் வகுப்புகளும் இருந்தன.
தமிழிலும் ஆங்கிலத்திலும் எப்படியோ அறுபது மதிப் பெண்ணை எட்டிவிடுவேன்.
கணக்குப் பெரிதாக வரவில்லை. அறிவியல் வசப்பட மறுத்தது. மொத்தத்தில் நானொரு சராசரி மாணவன். ஆசிரியர்கள் என்னை அடித்ததாக நினைவில்லை. அம்மா தான் மதிப்பெண் குறைந்தால் அடிப் பார்கள். அடிவிழுமே என்று அஞ்சி யெல்லாம் அதிக மதிப்பெண் பெற முயன்றதாகவும் நினைவில் இல்லை. பள்ளிப் பருவத்தில் பெரிய தமிழார் வமோ, பேச்சாளனாக வேண்டு மென்ற வேட்கையோ இருக்க வில்லை. என் கையெழுத்து அப்போது அழகாக இருந்தது. அதனால் என் பௌதிக ஆசிரியர் பத்மநாபன் சாருக்கும், இந்தி பண்டிட் மாதவச் சாரி சாருக்கும் என்னை ரொம்பப் பிடிக்கும். ஏனென்றால், அவர்கள் கையெழுத்தும் அழகாக இருக்கும். அவர்களும் அழகாக இருந்தார்கள்.
என் பள்ளிப்பருவம் மகிழ்ச்சியான பருவம். பெரிய பட படப்போ, பரபரப்போ இல்லாமல் நிறைய செலவாகாமல், பள்ளி இறுதி வகுப்பை முடித்தேன். ஐநூறுக்கு முந்நூற்றி தொன்னூற்று ஆறு மதிப்பெண். எந்த இடர்ப்பாடும் இல்லாமல், மதுரை தியாகராசர் கலைக்கல்லூரியில் புதுமுக வகுப்பில் சேர்ந்தேன்.
மேடைப்பேச்சின் மீதான ஆர்வம் எதனால், எப்போது உண்டானது?
தியாகராசர் கல்லூரித் தமிழாசிரியர்கள் போட்ட வித்து; பேராசிரியர்கள் சுப.அண்ணா மலை. அ.சங்கரநாராயணன், ஔவை நடராசன் போன்றவர்கள் வகுப்பு நடத்துகிறபோது செய்த வித்தை; தமிழ் ஓர் ஆற்றல் உள்ள, அழகான மொழி என்று அவர்கள் எடுத்துக்காட்டிய விதம்; எல்லாம் சேர்ந்து, எந்தப் பெரிய ஆர்வமும் இல்லாதிருந்த எனக்குள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. என்னோடு பயின்ற சக மாணவர்கள் எத்தனை பேருக்கு அப்படி ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டதென எனக்குத் தெரியாது. ஆனால் எனக்குள் ஏற்பட்டது. ஒரு வேளை எனக்குள் ஏதோவொரு நெருப்புத்துளி, எனக்கே தெரியாமல் இருந்திருக்கலாம். இலக்கிய விரல்கள் பட்டதும் துளி, ஒளியானது.
1967-இல் இந்தி எதிர்ப்புப் போராட்டக் காலத்தில், நா.காமராசன், கா.காளிமுத்து போன்ற மாணவர் தலைவர்கள் எங்கள் கல்லூரி வளாகத்தில் பேசிய அனல் பேச்சுகள் ஒளியைக் கூட்டிவிட்டன. எங்கள் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட இலக் கியக் கருத்தரங்கங்கள், பட்டிமன்றங்கள், கவியரங் கங்கள் எல்லாமே நாமும் ஒரு பேச்சாளனாக வேண்டுமென்ற பேரார்வத்தை எனக்குள் தூண்டின.
என் நல்லூழ், அந்தக் கூட்டங்களில்தான் அறிஞர் அண்ணாவை, கலைஞரை, நாவலரை, பேராசிரியரை, சி.பி.சிற்றரசுவை எல்லாம் செவிமடுக்க வாய்ப்பானது. எல்லாம் சேர்ந்து, ஆங்கில இலக்கிய மாணவனான என்னைத் தமிழ்ப் பேச்சாளன் ஆக்கியது.
குன்றக்குடி அடிகளாரின் தலைமையிலான பட்டிமன்றத்தில் நீங்கள் முதன்முதலாக மேடையேறிய அனுபவம் குறித்து?
மடங்களுக்கு அதிபதிகளானவர்கள் நடுவில் மனதைத் தமிழுக்குப் பறிகொடுத்த மடாதிபதி குன்றக் குடி அடிகளார். பட்டிமன்றங்களைக் கனமாக்கி யவர்; கருத்துமிகுந்த வாதப் பிரதிவாதங்களுக்கு மட்டுமே இடம் கொடுத்தவர்; இனிய சொல்லினர்; தலைப்புகளாலே பட்டிமன்ற மேடைகளைக் கௌரவப்படுத்தியவர். சில்லறை நகைச்சுவை மேடையேற முயன்றால் சீறியவர்; அவர் ஆழமான பேச்சாளர்க்குத் தாய்ப்பால். அர்த்தமற்ற பேச்சாளர்க்கு வேப்பங்காய்.
1973-ஆம் ஆண்டு மே மாதம் இந்தப் பெரியவர் தலைமையில் என் பட்டிமன்றக் கன்னிப்பேச்சு அரங்கேறியது. தென்காசித் திருவள்ளுவர் கழகத் தில் முதல் மேடை. முதல்தரமான நடுவர். மூச்சு முட்டியது, குரல் நடுங்குமோ என்று குலைநடுங்கி யது, யார் செய்த புண்ணியமோ, முதல் பேச்சே நன்றாக அமைந்துவிட்டது. அடிகளாரின் அன்புப் பாராட்டில் மகிழவும் முடிந்தது. அன்று தொடங் கிப் பல பட்டிமன்றங்களில் அவர் நடுவாண்மையில் நான் பேசினேன். பேசினேன் என்பதைவிட பேசப் பயின்றேன் என்பதே பொருத்தமானது. அடிகளார் மேடையில்தான் வள்ளுவம், மார்க்ஸியம், கௌடில்யம், காந்தியம் எல்லாம் பேசினேன். அவர் மேடைகளில் தான் நான் ஓர் அறிவுஜீவியாக, சமூக ஜீவியாக உணர்ந்தேன்.
அடிகளார் தலைமையில் அமைந்த எனது முதல் பட்டிமன்றம், ஒப்புக்கொண்ட ஒரு பேச்சாளர் வராததால் எனக்குக் கிட்டிய வாய்ப்பு. அந்தப் பேச்சாளர் வராமல் போனது எனக்கு வரமாகிப் போனது.
தொடக்ககாலத்தில் கவிதைகளை எழுதிய நீங்கள், இப்போதும் கவிதைகளை எழுதுகிறீர்களா..?
கவிதையில்தான் தொடங்கினேன். பேராசிரியர் அ.கி.பரந்தாமனார் அவர்கள் எழுதிய ‘கவிஞராக’ என்கிற நூலைப் படித்து, பயின்று கவிதை எழுதத் தொடங்கினேன். என் தமிழ்ப் பேராசிரியர்கள் அ.சங்கரநாராயணன், சுப.அண்ணாமலை போன்றவர்கள் தட்டிக் கொடுத்ததால், சீர் தட்டாமல் எனக்குக் கவிதை வந்தது. கவிஞர்கள் மரியதாஸ், பழநி இளங் கம்பன், மீரா, கவிக்கோ அப்துல்ரகுமான், ஈரோடு தமிழன்பன், மேத்தா, கவிஞர் வாலி போன்ற கவிச் சிகரங்களின் தலைமையில் நான் கவிதை வாசித்திருக்கின்றேன். நான் மேடைகளுக்கு வந்த 70, 80-களில் கவியரங்கம் இல்லாத இலக்கிய விழாக்கள் இல்லை. இப்போது கவியரங்கங்கள் அருகிவிட்டன. நானும், பட்டிமன்றம் பேசத் தொடங்கியபிறகு, கவிதைகளில் இருந்து விலகவில்லை. ஆனால், கவிதை எழுதுவதில் இருந்து விலகிவிட்டேன்.
கவிதை எழுதுவது என்பது எளிதான வேலை இல்லை. அது ஒரு தியானம். அது ஒரு தவம். நான் அதை இப்போது முழுமையாகச் செய்யவில்லை. ஆனால், முகநூல் பதிவுகளிலும், முகநூல் பதில் களிலும், வாழ்த்துகளிலும் இப்போதும் கவிதை முயல்கிறேன். எடுத்துக்காட்டாக ஒரு கவிதை;
தடித்த பேச்சு;
மன்னிப்பு;
தலைமறைவு;
முன்ஜாமீன் விண்ணப்பம்;
கைது;
நிபந்தனை ஜாமீன்;
விடுதலை;
ஒவ்வொரு முறையும் இவ்வளவு தான்!’
முன்பு இருந்ததுபோல் பட்டிமன்றங்களுக் கான வரவேற்பும், மக்கள் ஆதரவும் இன்றைக்கும் இருக்கிறதா?
இன்றைக்குப் பட்டிமன்றங்கள் பட்டிமன்றங் களாக இருக்கின்றனவா? என்று கேட்டால், இல்லை என்பதுதான் பதிலாக இருக்கமுடியும். அதே பதில் தான் உங்கள் கேள்விக்கும். நான் பேசத் தொடங் கிய காலத்தில் கோயில் திருவிழாக்கள் என்றால் கிராமம்தோறும் பட்டிமன்றம் தான். வில்லுப் பாட்டு, தெருக்கூத்து, கதா காலட்சேபம் எல்லாம் மங்கி, பட்டிமன்றம் பொங்கிப் பிரவாகமானது.
கிராம மக்கள், நகர மக்கள், கல்லூரிகள், இலக் கியக் கழகங்கள், அரிமா சங்கங்கள் என்று எல்லா தரப்பாரும் பட்டிமன்றத்தைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்கள், காலையில் ஓர் ஊரில், இரவில் மற்றோர் ஊரில் என்று நானே இரண்டு பட்டிமன்றங்கள் பேசியிருக்கிறேன். அந்த வீச்சு இன்று இல்லை. அந்தப் பேச்சும் இல்லை.
தொலைக்காட்சிகளில் பட்டிமன்றங்கள் வந்த பிறகு, வெளியே குறைந்துவிட்டது. தலைப்புகள் தட்டுப்பாடு. சிந்தனைச் சிக்கனம்; தரங்கெட்ட கோமாளித்தனம். ஒவ்வொரு ஊரிலும் தடுக்கிவிழும் இடத்தில் எல்லாம் நடுவர்கள்; பேச்சாளர் சிலரின் அழிச்சாட்டியங்கள்; பேச்சாளர் சிலரின் சன்மானப் பேராசைகள்… இப்படிப் பல காரணங்களால் பட்டி மன்றத்துக்கான வரவேற்பும் ஆதரவும் அருகு கின்றன.
ஆங்கிலத் துறை பேராசிரியரான நீங்கள் தமிழ் இலக்கிய - ஆன்மீக மேடைகளில் புகழ் பெற எது காரணமாக இருந்தது?
தமிழைத்தான் காதலித்தேன். ஆங்கிலத்தை மணந்தேன். திருமணத்துக்குப் பிறகும் தமிழையே காதலிக்கிறேன். என் நாக்கு ஆங்கிலம் பேசும்; ஆனால் நாடி நரம்பெல்லாம் தமிழே மணக்கும். நான் இளமறிவியல், முதுகலை ஆங்கிலம் பயின்றவன்.
என் பேராசிரியர்கள், “உன் பேச்சில், கொஞ்சம் அறிவியல் பார்வையும், ஆங்கில ஞானமும் வெளிப் பட்டால், நீ வெற்றி பெறுவாய்” என்று வாழ்த்தினார் கள். அந்த வாழ்த்தே என் புகழுக்குக் காரணம் என்று நினைக்கிறேன்.
நவீன அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந் திருக்கும் 21-ஆம் நூற்றாண்டிலும் விபீஷணனா, கும்பகர்ணனா போன்ற தலைப்பிலான பட்டிமன்றங் கள் தேவை என்று கருதுகிறீர்களா?
தேவையே. மனிதன் மூளையாலும், மனதாலும் தான் வாழ்கிறான். அறிவியலும், தொழில்நுட்பமும் மூளை சார்ந்தது. இலக்கியம் மனம் சார்ந்தது. இன்றைக்கு மூளைச் சாதனைகள் பெருகிவிட்டன. மனச் சமாதானம்தான் அருகி வருகிறது. மன நிர்வாகத்துக்கு இலக்கியங்கள் தேவை. இராமாய ணம் சமயக் காப்பியம்தான். ஆனால் கடவுள் மறுப்பாளர்களும், கம்யூனிஸ்டுகளும் அந்தக் காப்பியத்தில் பொதிந்து கிடக்கிற சமுதாய சிந்தனை கள் கருதி, இராமாயணத்தைக் கருத்தில் கொண்டார் கள். குறிப்பாக கம்ப ராமாயணத்தை.
கற்பில் சிறந்தவள் கண்ணகியா? சீதையா?’ போன்ற தலைப்புகளுடன் என்றும் எனக்கு உடன் பாடு இருந்ததில்லை. ஆனால், ‘தம்பியருள் சிறந்தவன் கும்பகர்ணனா? வீடணனா?’ என்ற தலைப்போடு எனக்குச் சண்டையில்லை. கும்பனும், வீடணனும் இரண்டு மதிப்பீடுகளின் பிரதிநிதிகள். குறியீடுகள். கும்பன் ‘செய்நன்றியறிதல்’ என்கிற மதிப்பீட்டுக்கு. வீடணன் ‘அறவழி நிற்றல்’ என்கிற மதிப்பீட்டுக்கு. கும்பன் கெட்ட பழக்கமுள்ள நல்லவன். வீடணன் நல்ல பழக்கமுள்ள நல்லவன். அறப்பண்புகள் மரணப் படுக்கையில் கிடக்கிற இன்றைய சூழலில், குடும்பங்கள் சீர்குலைந்து வருகிற இன்றைய சூழலில் கும்பனும், வீடணனும் சிந்திக்கத் தகுந்தவர்களே!
நீங்கள் இரசித்து கேட்கும், வியந்து பார்க்கும் பேச்சாளர் யார்?
பேராசிரியர் சாலமன் பாப்பையா, முனைவர் தெ.ஞானசுந்தரம், கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், தம்பி பாரதி கிருஷ்ணகுமார் என்று பலர். நான் யாரைக் குறிப்பிட்டுச் சொல்ல? இலக்கிய ஞானமும், சமூக சிந்தனையும் உள்ள எல்லாப் பேச்சாளர்களையும் வியக்கிறேன். ரசிக்கிறேன்.
பேராசிரியர் ராமச்சந்திரனாக இருந்த நீங்கள் எப்போதிலிருந்து ‘சிவகாசி ராமச்சந்திரனாக’ அவதாரம் எடுத்தீர்கள்?
இயக்குநர் விசு அவர்கள் ‘அரட்டை அரங்கம்’ நடத்திக் கொண்டிருந்த காலத்தில், சில ஊர்களுக்கு என்னையும் பேச அழைத்துச் சென்றார். அவருக்கு என் பேச்சு மிகவும் பிடித்துப்போய், ‘சன்’ தொலைக் காட்சி ‘அரட்டை அரங்கம்’ ஒளிபரப்பில் பெயர் போடுகிறபோது சிவகாசி இராமச்சந்திரன் என்று விசு சார்தான் போட்டுவிட்டார். அது நிலைத்தது. உண்மையில் நான் மதுரைக்காரன். இப்போது வாழ்வது தென்காசியில். இருந்தாலும் நான் சிவகாசி இராமச்சந்திரன் தான். சிவகாசி நான் முப்பத்து நான்கு ஆண்டுகள் பணியாற்றிய ஊர். மேடைகளுக்கு அனுப்பி வைத்தது சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி… எல்லாம் சேர்ந்து என்னை சிவகாசி இராமச்சந்திரன் என்றே நிலைக்க வைத்தது.
மேடைகளில் என்னை அறிமுகப்படுத்துகிற அன்பர்கள், சிவகாசி இராமச்சந்திரன் பேச்சில் வேட்டுச் சத்தமும், மத்தாப்பு வெளிச்சமும் இருக்கும் என்பார்கள். வெடிப்புறப் பேசுவதும், வெளிச்சம் தேடிப் பேசுவதும் பேச்சாளர் கடன்.
பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றக் குழுவில் நீங்களும் இருந்து, பல ஆண்டுகள் பேசியிருக்கிறீர்கள். சாலமன் பாப்பையா ஐயாவைக் குறித்து சில வார்த்தைகள்...
மதுரை அமெரிக்கன் கல்லூரி, தமிழ் மேடை களுக்குத் தந்த வரம். பண்டிதர் கையில் இருந்து, தமிழை வாங்கி, பாமரர் மத்தியில் விதைத்து, விளைவித்த சொல்லேருழவர். பட்டிமன்றங் களைப் பெண்கள் மத்தியில் பிரபலமாக்கியவர். ‘திருக்குறள்’, ‘புறநானூறு’ போன்ற தமிழ்ச் சாதனை களுக்குப் புதிய உரை எழுதி, அன்னைத் தமிழை அழகுபடுத்தியவர். பழகுவதற்கு இனியவர்; பளிச்சென்று சிரிப்பவர். புகழைத் தலைக்குள் ஏற்றா தவர்; தண்ணளியர். சன் தொலைக்காட்சிக்குக் கிட்டிய சன்மானம். எனக்கும் தொலைக்காட்சி வெளிச்சம் தந்தவர்; என்னையும் விமானத்தில் ஏற்றி வெளிநாடுகளைப் பரிச்சயம் செய்தவர். என்றும் நன்றிக்குரியவர்.
ஒரு பேச்சாளராக உலக நாடுகளையெல்லாம் சுற்றி வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு மிகவும் பிடித்த நாடு எது? ஏன்?
பொதுவாக எனக்கு வெளிநாட்டுப் பயணங் களில் விருப்பமில்லை; விமான நிலையக் காத்திருப் புகளும் கெடுபிடிகளும் எனக்கு உவப்பானவையல்ல.
போன நாடுகளில் பிடித்தது மலேசியா, சிங்கப்பூர். ஏனெனில் நிறையத் தமிழர்கள் வாழ்கிறார்கள்; தமிழைக் கொண்டாடுகிறார்கள்; தமிழை ரசிக்கிறார் கள். அரசாங்கங்களும் தமிழுக்கும், தமிழர்க்கும் அரிய அங்கீகாரத்தை அளித்துள்ளன.
நீங்கள் நடுவராகத் தலைமையேற்கும் பட்டிமன்றங்களுக்கான தலைப்புகளை நீங்களே கொடுப்பீர்களா அல்லது ஏற்பாட்டாளர்கள் கொடுக்கும் தலைப்பை அப்படியே ஏற்றுக் கொள்வீர்களா..?
இரண்டும் தான். கொடுப்பதுமுண்டு. கொடுப் பதை ஏற்பதும் உண்டு. சில ஏற்பாட்டாளர்கள் கொடுக்கிற தலைப்புகள் மலினமாகவோ, ஒரு சாரார் பேச வாய்ப்பு இல்லாததாகவோ இருந்தால் எடுத்துரைத்து மாற்றுவதும் உண்டு.
பல்லாயிரம் மேடைகள், பல நூறு தலைப்பு களில் பேசியிருக்கிறீர்கள். உங்களுக்கு மிகவும் பிடித்த தலைப்பு எது?
குடும்பம் சார்ந்த, சமூகம் சார்ந்த, அறிவியல், மருத்துவம் சார்ந்த பல தலைப்புகளில் பேசியிருக்கின்றேன். அவற்றில் எனக்குப் பிடித்த மான தலைப்பு; ‘நம் வாழ்க்கை நம் கையிலா? பிறர் கையிலா?’ எந்த கருத்தையும் அறிவார்ந்த சிந்தனையோடும் ஆழமாகவும் நகைச்சுவையாகவும் பேசுவதில் வல்லவர் நீங்கள். இது உங்களுக்கு இயல்பாக அமைந்ததா நீங்களாகப் பேச உருவாக்கிக் கொண்ட பேச்சு உத்தியா?
சில பேச்சாளர்கள் தங்களைப் பெரிய சிந்தனை யாளர்கள் என்று வரித்துக்கொண்டு நகைச் சுவையை நஞ்சென வெறுக்கிறார்கள். சில நகைச்சுவை யாளர்கள் சிந்தனையைச் சிறிதும் பொருட்படுத்தாது புறம்தள்ளுகிறார்கள். எனக்கு இது உடன்பாடில்லை. ஒரு மணி நேரப் பேச்சை சிந்தனை என்கிற பேரில் சிரிப்புக்கு இடமில்லாமல் பேசினால், கேட்பாளர்கள் களைத்துப் போவார்கள். ஒரு மணி நேரமும் சிந்தனையே இல்லாமல், கிச்சு கிச்சு மூட்டிக் கொண்டே இருந்தால், கேட்பாளர்கள் வெறுத்துப் போவார்கள். சிந்தனையையும் சிரிப்பையும் சரி விகிதத்தில் கலந்துகொடுத்தால், பேச்சு வெற்றி பெறும் என்று முடிவெடுத்து, நான் உருவாக்கிக் கொண்ட பாணி தான் என்னுடையது. சிந்தனை என்கிற பெயரில் கொடூரமாகப் பேசுவதோ, நகைச் சுவை என்கிற பெயரில் கொச்சைத்தனமாகப் பேசு வதோ எனக்கு என்றுமே உடன்பாடு இல்லாதவை.
காரல் மார்க்ஸ் மதவாதியல்ல; ஆனால் ஆன்மிகவாதி என்று வார இதழ் ஒன்றில் வெளியான தங்களின் கருத்தொன்று விவாதமானதே.
இப்போதும் அந்தக் கருத்து சரியென்றே நினைக் கிறீர்களா..?
விவாதமாக வேண்டிய விஷயமில்லையே இது.
நான் சொன்னது உண்மை. இப்போதும் எனது கருத்து அதுதான்.
மதம் என்பது குறிப்பானது;
ஆன்மீகம் என்பது பொதுவானது.
மதம் குறுகியது;
ஆன்மீகம் பரந்தது.
ஓர் இந்து கிருத்துவன் ஆனால், கோபம் வருகிறது.
ஆனால், ஆன்மீகவாதி ஆனால், ஆனந்தமாய் இருக்கிறது.
காந்தி மதத்தை நம்புகிற ஆன்மீக வாதி.
நேரு மதத்தை நம்பாத ஆன்மீக வாதி.
வள்ளலார் மதத்தை நம்புகிற ஆன்மீக வாதி.
பாரதியும் அப்படியே காரல் மார்க்ஸ் மதத்தை நம்பாத ஆன்மீக வாதி.
மதத்தை ஆன்மீகம் என்று மயக்குகிறவர்கள் மனித விரோதிகள். ஆன்மீகம் அற்ற மதவாதிகள் ஆபத்தானவர்கள்.
ஒரு பேராசிரியராக இன்றைய இளைய தலைமுறை மாணவர்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?
சாக்ரடீஸ் காலத்தில் இருந்தே, இளைஞர்கள் மேல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இன்றைய மாணவர்கள் மோசமான வர்கள் அல்ல; மோசம் போனவர்கள்; இன்றைய அரசியல், சமுதாய அமைப்புகளால் அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். நான் எம்.ஏ., படித்துக் கொண்டிருந்த போது, எனக்கு வேலை கிடைக் குமா? என் எதிர்காலம் சிறப்பாக இருக்குமா? என்கிற கேள்விகளால் எனக்கு எவ்வித பரபரப்போ, படபடப்போ ஏற்பட்டதில்லை. நான் எம்.ஏ., தேர்வு எழுதி, தேர்வு முடிவுகளுக்காக நான் காத்துக்கொண்டிருந்தபோதே, எனக்கு வேலை கிடைத்துவிட்டது. இன்றைய மாணவர்களுக்கு அப்படி என்ன உத்தரவாதம் இருக்கிறது? வேலை கிடைக்குமா? படிப்புக்குத் தகுந்த வேலை கிடைக் குமா? கிடைத்தாலும் நிரந்தரமாக இருக்குமா? சம்பளம் ஒழுங்காகக் கிடைக்குமா? என்று எத்தனை எத்தனை அச்சமூட்டி அரிக்கும் கேள்வி கள். இவற்றுக்கு மத்தியிலும் அவர்கள் சாதிக்கிறார் கள். துரோகங்களுக்கு மத்தியில் துளிர்க்கிறார்கள்.
விளையாட்டுத் தனமும், விஷமத்தனமும் கூடி இருக்கின்றன என்பது உண்மை தான். காரணம் முழுக்க முழுக்க அவர்கள் இல்லை. கொள்கைப் பிடிப்பில்லா அரசியல் அமைப்பு, கோடிக்கணக்கில் சம்பாதிக்கத் துடிக்கும் கல்வி நிறுவனங்கள், தங்கள் கனவுகளை எல்லாம் பிள்ளைகளின் தோள்களில் சுமத்துகிற பெற்றோர்கள், திரைப் படங்கள், தொலைக்காட்சி, அலைபேசி என்ற வன்முறை, ஆபாசக் களஞ்சியங்கள், உனக்குப் பசிக்கிறதா? பசியோடேயே இரு. நான் என்னிடம் இருந்தாலும் உன் பசியாற்ற மாட்டேன் என்கிற செல்வந்தர்கள். இளமையும், மாணவப் பருவமும் இதையெல்லாம் மீறி, ஒழுக்கமாகத் தான் இருக்கிறது என்பதே என் கருத்து.
உங்களின் இந்தப் பேச்சுப் பயணத்திற் கான வெற்றிக்கு முதல் காரணமாக யாரைக் குறிப்பிடுவீர்கள்?
வேறு யார்? நான் தான். என் முயற்சி தான். என் பயிற்சி தான். என் தகப்பனார் / தாயார் நெசவுக்காரர்கள். அவர்களுக்கு என் கூடப் பிறந்தவர் கள் மூன்று தம்பிகள்; இரண்டு தங்கைகள். யாருக்கும் பேச்சுலகம் பற்றிக் கொஞ்சமும் அக்கறை கிடையாது. என் நண்பர்களும் அப்படியே. ஒரு வேளை என் கொள்ளுத் தாத்தாவாக இருக்கலாம். நாகர்கோவிலில் திண்ணையில் அமர்ந்து அவர் இராமாயணம், பாரதம் வாசிப்பாராம்; தெரு மக்கள் கேட்பார்களாம். அவர் வாழ்ந்த வீடே புராணிகர் வீடு என்று அழைக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருவேளை அவரது மரபணு எனக்குள் இருந்திருக்கலாம்.
பேச்சு - எழுத்து. இவை இரண்டிற்குமான ஒற்றுமை - வேற்றுமை என்ன?
முதலில் இரண்டுக்கும் ஞானம் வேண்டும். இரண்டுக்கும் பயிற்சி வேண்டும். இரண்டுக்கும் மானுடம் குறித்த அக்கறை வேண்டும். பேசுகிறவர்கள் எல்லாம் பேச்சாளர்கள் அல்ல; எழுதுகிறவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் அல்ல; எவன் பேச்சை ஆளுகிறானோ, எவன் மூச்சால் ஆளுகிறானோ, அவன் பேச்சாளன். எவன் எழுத்தை ஆளுகிறானோ, எவன் எழுத்தால் ஆளுகிறானோ, அவன் எழுத் தாளன். இரண்டும் தவம் தான்.
எழுத்து தெய்வம் என்றால், அந்தத் தெய்வத்தின் அருளை எழுதப் படிக்கத் தெரியாத பாமரனுக்கும் வாரி வழங்குவது பேச்சு. நம் இஷ்டப்படி எல்லாம் தெய்வத்தைக் கஷ்டப்படுத்தக் கூடாது. கண்டதை எழுதலாம்; பேசலாம்; கண்டதை எல்லாம் எழுதவோ, பேசவோ கூடாது. எழுத்தின் மூலம், பேச்சின் மூலம் சம்பாதிக்கலாம். ஆனால் சம்பாதிப் பதற்காகவே எழுதவோ. பேசவோ கூடாது. இரண்டும் அபச்சாரமாகவோ, விபச்சாரமாகவோ ஆகிவிடக் கூடாது. உபச்சாரமாக இருக்க வேண்டும்.
உங்கள் பேச்சினூடாக நீங்கள் சாதித்தது என்ன?
இந்தக் கேள்வி என்னை அழுத்தமான குற்ற உணர்வுக்கு ஆளாக்குகிறது. நான் பேச்சுலகுக்கு வந்து ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. பெரிதாக ஒன்றும் சாதித்ததாகத் தெரியவில்லை. என் பேச்சின் மூலம், இளைஞர்கள் திருந்தி இருக்கிறார்கள் என்றால், அது பொய்; சமுதாயம் விழித்திருக்கிறது என்றால், அதுவும் பொய்யே. குடும்பங்களில் ஒழுக்கம் மேலோங்கி உள்ளது என்றாலும், பொய்யே.
என் பேச்சைக் கேட்பவர்கள் அந்த நேரத்தில் மகிழ்ந்தார்கள் என்பதும், கைதட்டுச் சத்தமும், பாராட்டு வார்த்தைகளும் எனக்குள் ஒரு போதையை விதைத்தன என்பதும் கொஞ்சம் உபரி வருமானம் வந்தது என்பது மட்டுமே உண்மை. மற்றபடி பெரிய சாதனை ஒன்றும் நிகழ்ந்துவிடவில்லை. ஏனென்றால், நான் லிங்கனோ, மார்ட்டின் லூதர் கிங்கோ, அறிஞர் அண்ணாவோ, கலைஞர் கருணாநிதியோ அல்ல. என் பேச்சின் மூலமாக நான் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லை என்பதே பெரிய சாதனை தானே..!
இலக்கியத் திங்களிதழாக வெளிவரும் ‘இனிய உதயம்’ இதழ் குறித்த தங்களின் பார்வை..?
உதயம் என்றால் வெளிச்சம். வெளிச்சம் வந்தால் விழிப்பு வருகிறது. ‘விடிந்தால் விழிப்பேன் என்று இருக்காதே! நீ விழித்தால் தான் விடியும்’ என்று சொல்கிறது ‘இனிய உதயம்.’
இலக்கியங்கள் இதயங்களுக்கு நெருக்கமா னால், இருட்டுகள் விலகும் என்பது சமுதாய சித்தாந்தம். அந்தச் சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிற இலக்கிய இதழ்தான் ‘இனிய உதயம்.’
ஆளுமைகளின் பேட்டிகள், ஆழமான இலக்கியக் கட்டுரைகள், மனித நேயம் மிக்க கவிதைகள், மொழிபெயர்ப்புகள், அறிமுகங்கள், முற்போக்குச் சிந்தனைகள், திரைப்பட விமர்சனங் கள் என்று விரிக்கிற சிறகின் ஒவ்வோர் இறகிலும் மானுடம் சுமக்கும் மகத்துவம் தான் ‘இனிய உதயம்.’